ஆடு வளர்ப்பு பண்ணை தொடங்க வங்கிகளில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள்


   மிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். கர்நாடக அரசின் நடவடிக்கைகளால், காவிரிப் பாசன பகுதிகளும் கூட, சமீபத்திய ஆண்டுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையில் தத்தளிக்கின்றன. இதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்பு கை கொடுக்கும் என்று வழிகாட்டியிருக்கிறது திருச்சி வேளாண் கண்காட்சி.
  புதிய தலைமுறை சார்பில் திருச்சியில் நடத்தப்படும் வேளாண் கண்காட்சியில் விவசாயிகளின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்தவற்றில் ஒன்று ஆடு வளர்ப்பு. தலைச்சேரி, தென் ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போயர் ஆகிய ரக ஆடுகள் வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலத்தில் 300 ஆடுகள் வரை வளர்க்கலாம். நிலத்தின் ஒரு பகுதியில் ஆடுகளுக்கான பட்டியை உருவாக்கிவிட்டு, மற்றொரு பகுதியில் ஆடுகளுக்கான பசுந்தீவனத்தை பயிரிடலாம். 3 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆடு வளர்ப்பு பண்ணை தொடங்கினால், ஆண்டுதோறும் 5 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறலாம் என இந்த கண்காட்சியில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
"விளக்கம் நம்பிக்கை தந்தது":ஆடு வளர்ப்பு பண்ணை தொடங்க வங்கிகளில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் தரப்பட்டது. ஆடு வளர்ப்பு குறித்து கண்காட்சியில் தரப்பட்ட தகவல்கள் பயனுள்ளதாக இருந்ததாகவும், விரைவில் ஆடு வளர்க்கும் பண்ணை தொடங்கப் போவதாகவும் அதனைப் பார்வையிட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
வங்கிகளில் கடன் பெறலாம்: தமிழகத்தில், கோவை, திருப்பூர், தாராபுரம், கோவில்பட்டி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே ஆடு வளர்ப்பு தொழில் லாபகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
  தற்போது, தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற காவிரிப் பாசன பகுதிகளிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு தாண்டவமாடுவதால் ஆடு வளர்ப்பது விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சிறந்த தொழிலாக இருக்கும் என கண்காட்சியை பார்வையிட்ட பலரும் கருத்து தெரிவித்தனர். இன்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடு வளர்ப்பது குறித்து கண்காட்சியில் விளக்கம் பெற்றுச் சென்றனர்.
                               -இணைய செய்தியாளர் - s.குருஜி