தந்தையும் மகனும் ஒரே மேடையில் முனைவர் பட்டம்



     ந்தையும் மகனும் ஒரே மேடையில் முனைவர் பட்டம் பெறுவது, பெருமிதத்திற்குரியது மட்டுமல்ல, நெகிழ்ச்சியான விஷயமும் கூட. இத்தகைய ஒரு நிகழ்வு திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அரங்கேறியது.
  பட்டம் பெற வந்தவர்களையும், பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்திய அந்த தந்தை மகனை பற்றிய கதை இது.
  திருச்சி மாவட்டம், தென்றல் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியனுக்கு தற்போது 65 வயது. 45 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியுள்ள இவர், பல்வேறு பட்டங்களையும், சிறப்பு ஆசிரியருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
   சுப்பிரமணியனுக்கு மனைவியுடன் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். குலதெய்வ வழிபாடு குறித்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை கட்டுரையாக சமர்ப்பித்து தற்போது முனைவர் பட்டம் பெற்றுள்ளார் சுப்ரமணியன்.
 


"மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னூற்றான் கொல்" 
     எனும் சொல் என்ற மறை வாக்கிற்கு ஏற்ப இவரது மகன் கொளஞ்சி கண்ணன் அணுத் துகள் ஆராய்ச்சியை எட்டு ஆண்டுகள் மேற்கொண்டு கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.
   ஆய்வு செய்யும் ஊக்கத்தை தந்தையின் விடாமுயற்சியைக் கண்டே வளர்த்துக் கொண்டதாக கூறுகிறார் கண்ணன். இத்தகைய மகனையும், கணவனையும் அடைந்தது குறித்து பெருமிதம் அடைவதாக கூறியிருக்கிறார் சுப்பிரமணியனின் மனைவி.
           பாரதிதாசன் பல்கலை.யில் நெகிழ்ச்சி:
    பட்டமளிப்பு விழா என்றாலே பொதுவாக அவ்விடத்தில் உற்சாகத்திற்கு பஞ்சமிருக்காது. அதிலும் தந்தையும் மகனும் ஒரே மேடையில் பட்டம் பெறும் அதிசயத்தில் அனைவருமே வியந்து பாராட்டியதும் அரங்கேறியது. நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கலந்த அனுபவமாக இந்த பட்டமளிப்பு விழா மாறியது.