டீசல் விலை உயர்வு : வைகோ., ராமதாஸ் கடும் கண்டனம்

                        டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளதற்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் : ஊழல்களால் நாட்டை திவால் ஆக்கி வரும் காங்கிரஸ் அரசு, டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டு இருக்கும் நம் நாட்டில், பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
கட்டுபாடற்ற விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அல்லல்படும் போது, மேலும் அவர்கள் மீது இந்தச் சுமையை ஏற்றுவது தாங்க முடியாது. எனவே மத்திய அரசு உடனடியாக டீசல் விலை உயர்வை ரத்து செய்வதுடன், சமையல் எரிவாயு வழங்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதே போல் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் : டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இனி ஆண்டுக்கு 6 சமையல் காஸ் சிலிண்டர்கள் என்று அறிவித்திருப்பதன் மூலம் ஏழை எளிய மக்கள் மீது ஈவு இரக்கமற்ற தாக்குதலை மத்திய அரசு நடத்தியிருக்கிறது என கூறியுள்ளார்.                                                                                                                                                                         -இணைய செய்தியாளர் - s.குருஜி