திருச்சி துறையூரில் பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்த மாணவரன் உயிரிழந்தான். உயிரிழந்த மாணவன் கிஷோர், விக்னேஷ் வித்யாலயா என்ற பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளான்.
விபத்து நடந்தது எப்படி? இன்று காலை, அவனது வீட்டருகே, பள்ளி வாகனத்தில் அந்த மாணவன் ஏறியுள்ளான். வாகனம் புறப்பட்டு சில அடி தூரம் சென்ற போது, கதவு தானாக திறந்ததாகக் கூறப்படுகிறது. இதில், கீழே விழுந்த மாணவன் கிஷோர் மீது அந்த வாகனம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே, மாணவன் கிஷோர் உயிரிழந்தான். இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர், உறவினர் மற்றும் அப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் விளக்கம் : இந்த சம்பவம் தொடர்பாக, துறையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வாகனத்தின் கதவு சரியாக மூடாததே, இந்த சம்பவத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் அளித்துள்ள முதல் கட்ட விளக்கத்தில், வாகனத்தில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 2 குழந்தைகள் பலி : பள்ளி வாகனம் மோதி மனவளர்ச்சி குன்றிய 13 வயது மாணவர் ஒருவர் பலியான சம்பவம் திருச்சி மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பலியான மாணவன் மிதுனின் தந்தை துப்பாக்கிச் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். அறிவாலயா என்ற மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் மிதுன் பயின்று வந்தான். இன்று காலையில் அந்த வாகனத்தில் இருந்து இறங்கி சாலையைக் கடந்த போது அதே வாகனம் மிதுன் மீது மோதியது. இதில் மாணவன் மிதுன் படுகாயமடைந்தான். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மிதுன் சிகிச்சை பலனின்றி பலியானான். பள்ளி வாகன ஓட்டுநர் மது அருந்தி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.திருச்சியில் ஒரே நாளில் இரண்டு குழந்தைகள் இப்படி வாகன விபத்தில் பலியாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரத்தில் ஸ்ருதி ! கடந்த ஜூலை 25ம் தேதியன்று தாம்பரத்தில் உள்ள சீயோன் பள்ளி பேருந்தில் பயணம் செய்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பேருந்துக்குள் இருக்கைக்கு அடியில் ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் தமிழக அரசு பள்ளி பேருந்துகளில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை கோர்ட்டில் சமர்ப்பித்தது. அதிக கெடுபிடிகள் கொண்ட புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்ட நிலையிலும் மீண்டும் ஒரே நாளில் இரண்டு விபத்து நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீறப்பட்டதா அரசு உத்தரவு ? கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்தும் இது போன்ற விபத்துக்களுக்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியமா? இல்லை பள்ளி நிர்வாகத்தின் மெத்தனமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது.
-B.R.விஸ்வநாதன்