திட்டமிட்டு நடத்தப்படும் கொள்ளைகள் காவல்துறை கவனம் செலுத்துமா ?











தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரு நாட்களில் மட்டும் 4 மாவட்டங்களில் 6 கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
   திருச்சி மாவட்டம் துறையூரில் பெரிய கடை வீதியில் நகைக் கடை உரிமையாளர் ஒருவரது வீட்டில் சனிக்கிழமை இரவு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
   5 கிலோ தங்கம் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகளை மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் 5 தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.
  வேலூர் திருப்பத்தூரில் மாரியம்மன் கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து பணம், வெள்ளி மற்றும் தங்கக் காசுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
  இதே கோயிலில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரும் உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்டது.
  இதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவு அரக்கோணம் அருகே தபால் ஊழியர் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.
  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வெங்கடேஷ்வர் நகரில் ஓய்வு பெற்ற மில் ஊழியர் ராமச்சந்திர ராஜா என்பவர் வீட்டில் 50 சவரன் நகையும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்ப பணமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
  இதனிடையே, திங்கட்கிழமை மதியம் சிவகாசி - கட்டளைப்பட்டி சாலையில் வீட்டு வாசலில் அமர்ந்து குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டுருந்த பெண்ணிடம் பைக்கில் வந்த 2 பேர், 10 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் முனுசாமி என்பவரின் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, 30 சவரன் நகை மற்றும் 2 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
  முனுசாமி வீட்டுக்கு அருகே வசிக்கும் லாரி ஓட்டுநர் விஜயகுமார் என்பவரின் வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு இரண்டே கால் சவரன் நகை திருடப்பட்டுள்ளது.
  நகைக் கடைகள் மற்றும் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து இவ்வாறு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் வெளிமாநில கொள்ளைக் கும்பல்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
              திட்டமிட்டு நடத்தப்படும் கொள்ளைகள்

  அடகு கடை, நகை கடை ஆகியவற்றை குறிவைத்து நடத்தப்படும் கொள்ளை சம்பவங்களில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஈடுபடுகிறார்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
  தங்க நகை கடை, அடகு கடை ஆகியவற்றில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களுக்கு பின்னால், பெரிய கும்பலே இயங்குகின்றன என்று கூறப்படுகிறது.
  பிற மாநிலங்களிலிருந்து இயக்கப்படும் இந்த கும்பல்கள் முதலில் தொழிலாளர்களாக தமிழகம் வருகின்றனர். பின்னர் பாதுகாப்பில் பலவீனமாக இருக்கும் கடையை குறிவைத்து நோட்டமிடுகின்றனர்.
  இந்த கும்பல் திரட்டிய தகவல்களை கொண்டு, கொள்ளையடிக்கும் திட்டம் தயார் செய்யப்படுகிறது. அடுத்ததாக, திட்டத்தை நிறைவேற்ற தேவைப்படும் கருவிகளை இந்த கும்பல்களைச் சேர்ந்தவர்கள் சேகரிக்கின்றனர்.
  கொள்ளையை அரங்கேற்ற உகந்த நேரத்தை தேர்ந்தெடுத்து சில மணித்துணிகளில் கொள்ளைச் சம்பவம் நடத்தப்படுகிறது.
  கொள்ளைச் சம்பவங்களில், கைதானவர்களிடம் விசாரணை நடத்தும் காவல்துறைக்கு இந்த கும்பல்களின் தலைவன் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
  கொள்ளை கும்பல்களை முழுமையாகக் கண்டறிந்து ஒழிக்க முடியததால்தான், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன என குற்றவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
         அதிகரிக்கும் தங்கம் விலையும் குற்றங்களும்

  தங்கத்தின் விலைக்கும் குற்ற சம்பவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த இரண்டும் ஏறுமுகமாகவே இருக்கிறது.

  தங்கத்தை இலக்காக வைத்து நடத்தப்படும் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதற்கு அதிகரித்து வரும் தங்கத்தின் விலை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
  விலை உயர்வு மட்டும் காரணமாக சொல்லப்பட்டாலும், அதை எளிதில் பணமாக்கும் வசதியும் முக்கியமான காரணமாக இருக்கிறது.
இதனிடையே கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் இருக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கொள்ளை வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  தங்கம் தொடர்பான குற்றங்களில் அதிக கவனம் செலுத்த முடியாமல் இருப்பதற்கு, ஆட்கள் பற்றாக்குறை முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

                                                      -இணைய செய்தியாளர் - s.குருஜி

------------------------------------------------------------------------------------------------------------

திருச்சி துறையூரில் ரூ. 2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

   திருச்சி துறையூரில் நகைக் கடையுடன் இணைந்த வீட்டில், கொள்ளையர்கள் புகுந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
   அங்கு பெரிய கடை வீதியில் சத்தியநாராயணன் என்பவர் நகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவரும், மனைவியும் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் பின் பகுதி வழியாக வந்த கொள்ளையர்கள் கிரில் கேட் மற்றும் இரண்டு இரும்புக் கதவுகளைத் திறந்து உள்ளே புகுந்துள்ளனர்.
   பின்னர், அடுத்ததாக இருந்த மரக் கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்த அவர்கள், 2 அலுமினியப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 5 கிலோ தங்கம் மற்றும் 15 கிலோ வெள்ளியை கொள்ளையடித்துச் சென்றனர்.
   இன்று அதிகாலை, தங்களது வீட்டில் கொள்ளை போனதை அறிந்த இந்தத் தம்பதியினர் காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில், துணைக் கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன் , தங்கவேலு ஆகியோர் விசாரணை செய்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து துறையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
                                                              -இணைய செய்தியாளர் - s.குருஜி